அன்மித்த செய்திகள்வெளிநாட்டு

ஆப்கானிஸ்தானில் கடும் சண்டை காபூல் அருகே உள்ள முக்கிய நகரம் தலிபான்களிடம் வீழ்ந்தது: பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பதாக அதிபர் கனி பேச்சு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடிக்க கூடிய நிலைக்கு தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். தலைநகர் காபூலை முற்றுகையிட்டுள்ள அவர்கள், அதன் அருகே உள்ள முக்கிய நகரமான மஜார் இ ஷெரிப்பையும் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் இருந்து  அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, அங்கு தலிபான்கள் அட்டூழியம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. நாட்டின் மூன்றில் 2 பங்கு தலிபான்கள் வசமாகி உள்ளது. பாகிஸ்தான் எல்லையையொட்டிய பக்திகா மாகாணத்தின் தலைநகரை நேற்று கைப்பற்றினர்.

தற்போது அவர்கள் தலைநகர் காபூலை முற்றுகையிட்டு, அரசு படைகளுடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதன் அருகே 11 கி.மீ. தொலைவில் உள்ள முக்கிய நகரமான மஜார் இ ஷெரிப்பை நேற்று அவர்கள் கைப்பற்றினர். இதனால், அவர்கள் காபூலை விரைவில் கைப்பற்றுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் நேற்று உரையாற்றிய அதிபர் அஷ்ரப் கனி, ‘‘நாடு மிகவும் ஆபத்தான, நிச்சயமற்ற நிலையில் உள்ளது. ஆப்கான் மக்கள் மீது வன்முறை மற்றும் போர் தொடுப்பதை அனுமதிக்க மாட்டேன். மக்கள் இடம்பெயர்வது நிறுத்தப்படும்.

இப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மூத்த தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நட்பு நாடுகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்படுகிறது. இதன் முடிவுகளை மக்களுக்கு விரைவில் அறிவிப்பேன்,’’ என்றார். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வசம் உள்ள ஆவணங்களை அழித்துவிட்டு உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்களை பாதுகாப்பாக, பத்திரமாக மீட்டு வருவதற்காக அமெரிக்கா 3,000 வீரர்களை அனுப்பி உள்ளது.

* `வாய்ஸ் ஆப் ஷரியா’
தலிபான்கள் வெளியிட்ட வீடியோவில், `கந்தகார் வானொலி நிலையம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதற்கு இஸ்லாமிய சட்டத்தின் குரல் என பொருள்படும் `வாய்ஸ் ஆப் ஷரியா’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதில் செய்திகள், அரசியல் விவாதங்கள், குரான் ஒதுதல் உள்ளிட்டவை ஒலிபரப்பப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

* வாக்குறுதியை காப்பாற்றுங்கள்
ஐநா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் கூறுகையில், “மாகாணத் தலைநகரங்களை வேகமாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தலிபான்கள், உடனடியாக தாக்குதலை நிறுத்தி நாட்டு மக்களின் நலன் கருதி நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். போர் நிறுத்த வாக்குறுதியை மீறி, தாக்குதலின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மீண்டும் போர் ஏற்படும் சூழலை உருவாக்கும்,’’ என்றார்.

* அதிகார பகிர்வு
தலிபான் அமைப்பினர் வன்முறையை நிறுத்தினால், அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. இடைத்தரகராக செயல்படும் கத்தார் அரசிடம் ஆப்கானிஸ்தான் அரசு இதனை தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* அஷ்ரப் ராஜினாமா?
அஷ்ரப் கனி அதிபராக இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று தலிபான் தலைவர்கள் கூறியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தனது ராஜினாமா அறிவிப்பை அஷ்ரப் வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவர் ராஜினாமா குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button