சமீபத்தியமலையகம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உ.ப தலைவர் செந்தில் தொண்டமானின் மே தின செய்தி!

உழைப்போரின் உன்னதத் திருநாளாம் மே தினத்தை உலகெங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள் என இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள ‘மே தின’ வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம் என்ற உண்மையை, பாட்டாளி வர்க்கம் இரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும்.

அதிகாலை முதல் அந்தி சாயும்வரை வேலை செய்ய வேண்டும் என்பதை எதிர்த்தும், எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தியும் எழுந்த போராட்டத்தின் வெற்றி தினமே மே தினம்!

இ.தொ.கா பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுகொடுத்தது போல அவர்களின் நலன்புரி விடயங்களையும் பெற்றுத்தரும்.

உழைப்புக்கேற்ற ஊதிய மின்மை, கொத்தடிமைத் தனமான இன்னல்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைத்த இந்த மே தின நன்னாளில், சிறுவர் தொழிலாளர் முறையை ஒழித்து, உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொண்டு, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் தொழிலாளர்களுக்கு உரிய பயன்களை அடையக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இந்த மே தினத்தில் நம்முடன் இல்லாதது பெறும் வறுத்தத்தை அளிக்கின்றது. அவர் தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தது போல, இ.தொ.கா தொடர்ந்தும் அவர் வகுத்த வழியில் தொழிலாளர்களுக்காக முன்நின்று செயற்படும்.

கொவிட் -19 தொற்று காரணமாக மக்களின் பாதுகாப்பு நலன் கருதி மே தின கொண்டாட்டங்கள் இந்த வருடம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொவிட் -19 தொற்றை முழுமையாக அழித்து, வறுமையை ஒழித்து எல்லோருக்கும் வாழ்வு கிடைக்க வழி தேடுவதே நமது திட்டமாகும். சமுதாயத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், வேலை வாய்ப்பு கிடைக்கவும் அவற்றின் மூலம் சமவாய்ப்பு அமையவும் இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம். தொழிலாளர்களின் வாழ்வில் வளமும், நலமும் கொழிக்கட்டும் என்று வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்