ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல்?எல்லா போட்டியும், ஒரே ஊரில்

ரசிகர்கள் இல்லாமல்  விளையாட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு  அனுமதி அளித்துள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் நேசிக்கும் ஐபிஎல் டி20 தொடர் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு 4ம் கட்ட ஊரடங்கை சில தளர்வுகளுடன் மே 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதில் ரசிகர்கள் இல்லாமல் மூடிய விளையாட்டு அரங்கிற்குள் விளையாட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், போட்டிகள் மீண்டும் நடைபெறலாம் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது.ஆனால் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில், ரசிகர்கள்  இல்லாமலும் போட்டிகள் நடத்துவது குறித்து ஏதும் சொல்லவில்லை. குறிப்பாக தமிழகத்தில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், தேசிய, சர்வதேச  விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகளை தனிப் பயிற்சியாளர் மூலம் பெற விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆனால் அதற்கு அந்தந்த மாநகர ஆணையர் அல்லது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதால், தமிழகத்தில் விளையாட்டு போட்டிகளை உடனடியாக தொடங்க வாய்ப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது.   ஐபிஎல் நடக்குமா? இந்நிலையில் மார்ச் 29ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை நடைபெற இருந்த ஐபிஎல் டி20 தொடர் கொரோனா தொற்று பீதி காரணமாக ஏப்.15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகும் ஊரடங்கு, கொரோனா அபாயம் தொடர ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டன. போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய ஸ்டேடியங்களில் நடத்த மத்திய அரசு அனுமதித்து இருந்தாலும், ஐபிஎல் போட்டிகள் உடனடியாக தொடங்க வாய்ப்பு இல்லை.

 வழக்கமாக இந்த தொடர் நடைபெறும் சென்னை, மும்பை, ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்கள் இன்னும் நோய் பாதிப்பு அதிகமுள்ள  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே தொடர்கின்றன. அதேபோல்  உள்ளூர் விமான போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து இல்லாததால்  வீரர்கள் ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல இந்தியா உட்பட எந்த நாட்டிலும் அனுமதி இல்லை. அதனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அதிக ஆர்வத்தில் இருக்கும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வர முடியாத நிலை உள்ளது. இப்படி பல்வேறு சிக்கல்கள் நிலவுவதால்  ஐபிஎல் போட்டிகள் உடனடியாக தொடங்க வாய்ப்பில்லை. இதே கருத்தை  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும்(பிசிசிஐ) உறுதி செய்துள்ளது.

இது குறித்து வாரிய நிர்வாகிகள் கூறுகையில், ‘மத்திய அரசின் முடிவு வரவேற்புக்குரியது. ஆனால் வீரர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அதனால் அவசரப்படாமல் நிலைமையை கவனித்து வருகிறோம். நிர்வாகிகள் எல்லோரும் தொடர்பில் இருக்கிறோம். தொடர்ந்து ஆலோசனை செய்கிறோம். பிசிசிஐயின் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் பயிற்சியை தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பேசி வருகிறோம்’என்று தெரிவித்துள்ளனர்.ஐபிஎல் தொடர் உடனடியாக தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்றாலும்,  டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் டி20  உலக கோப்பை தொடர் அக்.18 முதல் நவ.15 வரை நடைபெற உள்ளது.  எனவே ‘உலக கோப்பை தொடருக்கு முன்பே  ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும்’ என வெளிநாட்டு வீரர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில்  உலக கோப்பை போட்டியை ரசிகர்கள்  இல்லாமல் நடத்துவதாக இருந்தால், தள்ளி வைத்து நடத்துவதே சரியாக இருக்கும் என்பதும் பலரின் கருத்து. எனவே  மாநிலங்களிலும் தளர்வுகள் அறிமுகம்,  உலக கோப்பை தேதிகள்,  விமான போக்குவரத்துக்கு அனுமதி, முக்கியமாக கொரோனா தொற்று குறைதல் போன்றவையே ஐபிஎல் தேதியை முடிவு செய்யும்.

ஒரே நகரில்
பல்வேறு காரணங்களுக்காக ஐபிஎல் நடத்துவது தாமதமாகலாம். ஆனால் பிசிசிஐ வருவாய், வீரர்களின் வருவாய்,  போட்டிகளை ஒளிபரப்ப அனுமதி பெற்றுள்ள தொலைக்காட்சி நிறுவனத்தின் வருவாய் ஆகியவைதான் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதையும், தேதியையும் முடிவு செய்யும்.   அப்படி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால், ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படும். கூடவே பல்வேறு நகரங்களில் நடத்துவதற்கு பதில் ஒரே நகரில் தினமும் போட்டிகள் நடத்தும் திட்டம் உள்ளதாக டிஎன்சிஏ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை என்று பிசிசிஐ நிர்வாகியும் உறுதி செய்துள்ளார். ரசிகர்கள் தொலைக்காட்சியில் மட்டும்தான் போட்டிகளை பார்க்க முடியும் என்பதால், போட்டிகளை எந்த ஊரில் நடத்தினாலும், ஒரே ஊரில்  நடத்தினாலும்  பிரச்னை இருக்காது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close