தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரவுகிறது… உலக நாடுகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகம் முழுவதும் கடந்த 2 வாரங்களில் நாளொன்றுக்கு 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார். ஒரு நாளில் தொற்று உறுதி செய்யப்படுவோரில் 75% பேர் அமெரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஜெனீவாவில் அவர் நிரூபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். இந்த தொற்றை கட்டுப்படுத்திய நாடுகள் மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், மிகுந்த கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் 52 நாட்களாக தொற்று பரவல் இல்லாத நிலையில், தற்போது புதிதாக அங்கு தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். தொற்று பரவல் எண்ணிக்கை 2 மாதத்தில் 1 லட்சம் என்று இருந்த நிலை மாறி, தற்போது கடந்த இரண்டு வாரங்களாக 1 நாளில் 1 லட்சம் தொற்று என்ற நிலையை எட்டி இருப்பதையும் டெட்ரோஸ் ஆதனாம் சுட்டிக் காட்டினார். குறிப்பாக தெற்கு ஆசியா மற்றும் அமெரிக்காவில் வைரஸ் பரவும் வேகம் கட்டுக்கடங்காமல் செல்கிறது என்று குறிப்பிட்ட அவர், வைரஸ் மறு எழுச்சி பெறலாம் என்பதால் உலக நாடுகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 81 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34 லட்சத்து 81 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 லட்சத்து 87 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close