சுடுகாட்டிலேயே இடமில்லை.. பிரேசிலில் 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய உடல்களை புதைக்கும் அவலம்

பிரேசில் : பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,67,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிரேசிலில் கொரோனாவுக்கு 43,332 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் மடிவதால், சடலங்களை புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் பிரேசில் அரசு திக்குமுக்காடி வருகிறது.

இதனால் வேறு வழியின்றி சா போலாவில் உள்ள மிகப்பெரிய கல்லறையான விலா ஃபோர்மோசா கல்லறையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டி எடுத்துவிட்டு அந்த இடத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இது குறித்து சா போலா மெட்ரோ நகர நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிக்கையும் வெளியிட்டுவிட்டது. அதில், “ கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு அந்த இடத்தில் உள்ள எலும்புகள் ஒரு பிளாஸ்டிக் பையில் போடப்பட்டு அடையாளமிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த எலும்புகளை வைப்பதற்காகவே தனியாக 12 கன்டெய்னர்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த கன்டெய்னர்கள் 15 கல்லறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மிகப்பெரிய கல்லறையான விலா ஃபோர்மோசா கல்லறையில் ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.இந்தக் கல்லறையில் பணியாற்றிவரும் அடநெல்சன் கோஸ்டா கூறுகையில், “இந்தப் பணிகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. சவப்பெட்டியிலிருந்து எலும்புகளை எடுத்து பிளாஸ்டிக் பைகளில் போடும் பணியைச் செய்ய முடியவில்லை. எங்களுக்கு என்ன நடக்குமோ எனும் அச்சம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close