கொரோனா தொற்று சிகிச்சையில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை வழங்க வேண்டாம் : உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா : கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை வழங்க வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துதான் கடந்த 2 மாதங்களாக உலகின் மருத்துவ துறையில் முதன்மை பேசு பொருளாக இருந்து வருகிறது. மலேரியாவை கட்டுப்படுத்தக் கூடிய இந்த மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது என்பது பொது நம்பிக்கை.

இந்த நிலையில் சமீப காலங்களில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து மூலம் நடத்தப்பட்ட சிகிச்சையில், கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதங்களை குறைக்க முடியாது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்பவர்கள், தங்களது மருத்துவர்களின் ஆலோசனையின் படி ,அதை நிறுத்தவோ அல்லது முழுமைபடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என அறிக்கை ஒன்றில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

முன்னதாக ஆய்வுகளில் இருந்து கிடைத்த முடிவுகளின் படி, இந்த மருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான பயனையும் அளிக்கவில்லை என்றும், நோய்த்தொற்றின் கால அளவையோ அல்லது மரண அபாயத்தையோ குறைக்கவில்லை என்றும் கூறிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க வழங்கக்கூடாது என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close