எச்சிலுக்கு தடை… வியர்வை ஓகே!: ஐசிசி குழு பரிந்துரை

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட்டில் பந்தை பளபளப்பாக்க இனி எச்சில் பயன்படுத்தக் கூடாது, வியர்வையை பயன்படுத்தலாம் என்று அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் குழு இடைக்கால பரிந்துரையில் தெரிவித்துள்ளது. கொரோனா பீதியால் விளையாட்டுகள் முடங்கியதோடு, விளையாட்டு விதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குழு விளையாட்டுகளில்  வீரர்களிடையே அதிக அளவில் உடல் தொடர்பு இல்லாத விளையாட்டு கிரிக்கெட் தான். விக்கெட் விழுந்தால் கை குலுக்குவது, கட்டித் தழுவது போன்றவைதான் அதிகபட்ச உடல் தொடர்புகள்.   கொரோனா பீதிக்கு பிறகு இந்த உடல்மொழிளை விட அதிக விவாதத்திற்கு உள்ளானது… பந்தை பளபளப்பாக்க எச்சில், வியர்வையை தொட்டு தேய்ப்பதுதான்.

இந்த பிரச்னை குறித்து கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் குழு  ஆலோசைன நடத்தியது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் வீரர்கள் ராகுல் திராவிட், மகிளா ஜெயவர்த்தனே, ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், முன்னாள் வீராங்கனை பெலிண்டா கிளார்க், இலங்கை அணி தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், மூத்த நடுவர் ரிச்சர்டு இல்லிங்வொர்த், ஐசிசி தலைமை மருத்துவ ஆலோசகர்  டாக்டர் பீட்டர் ஹர்கோர்ட் ஆகியோர் பங்கேற்றனர். மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கினால் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்துவதால் கொரோனா தொற்று ஏற்படும்  அபாயம் குறித்து டாக்டர் பீட்டர் விளக்கமளித்தார்.

அதே நேரத்தில்  வியர்வையை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்குவது எச்சிலுக்கு மாற்றாக இருக்கும் என்றும், அதனால் தொற்றுக்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  அதே நேரத்தில் மெழுகு போன்ற செயற்கை பொருட்களை கொண்டு பளபளப்பாக்குவது பந்தை சேதப்படுத்துவதற்கு சமம் என்றும், ஐசிசி விதிகளுக்கு புறம்பானது என்பதால் அதையும் அனுமதிக்க கூடாது என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முடிவில்… வீரர்கள் எச்சில், மெழுகு உள்ளிட்ட செயற்கை பொருட்களை பயன்படுத்தக் கூடாது, வியர்வையை பயன்படுத்தலாம், ஆடுகளத்தில் எச்சில் துப்ப தடைவிதிப்பது உள்ளிட்ட தீர்மானங்களை இடைக்கால அறிக்கையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
ஐசிசி நிர்வாகிகள் மே 28ம் தேதி காணொலி காட்சி மூலம் நடத்தும் கூட்டத்தில் இந்த இடைக்கால பரிந்துரைகள் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுப்பார்கள்.

தற்காலிக பொது நடுவர்
கிரிக்கெட் போட்டிகளுக்கு பொது நடுவர் (நியூட்ரல் அம்பையர்) நியமிப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஊரடங்கு நிலவுவதால் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால் பொது நடுவர்களாக உள்ளூர் நடுவர்களையே தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம். நடுநிலைமை தொடர ஒவ்வொரு இன்னிங்சுக்கும் கூடுதலாக ஒரு டிஆர்எஸ் வாய்ப்பு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவை டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான போட்டிகளுக்கும் பொருந்தும்.

விளையாட்டை பாதுகாக்க…
நாம் மிகவும் அசாதாரண சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இன்று நாங்கள் அளித்துள்ள பரிந்துரைகள் கிரிக்கெட் விளையாட்டின் தன்மையை பாதுகாக்கும் நோக்கில், கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவதற்கான நோக்கத்தில் அளிக்கப்பட்ட இடைக்கால பரிந்துரைகளாகும். – அனில் கும்ப்ளே

தனிமைப்படுத்துங்கள்
போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானால் அந்த அணியில் உள்ள வீரர்கள், பயிற்சி அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவரையும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று டாக்டர் பீட்டர் பரிந்துரை செய்துள்ளார். மாற்று வீரரை களமிறக்கக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close