அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகளில் ஜனநாயக கட்சி ஈடுபட்டுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட 20 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒவ்வொரு மாகாணத்திலும் உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியில் போட்டியிடுவதற்காக முன்னாள் துணை அதிபர் ஜோ பீடன் மற்றும் பெர்னி சான்டர்ஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது. இதற்கிடையே அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பெர்னி சான்டர்ஸ் விலகினார். இதில் வேட்பாளராக தேர்வு பெறுவதற்கு 1991 வாக்குகள் தேவை என்ற நிலையில், முன்னாள் துணை அதிபர் ஜோ பீடனுக்கு 1995 வாக்குகள் கிடைத்துள்ளன.

தொடர்ந்து, ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். எனவே குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்பை தேர்விலே ஜோ பீடன் எதிர்கொள்கிறார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவுபெற்ற வேட்பாளரான ஜோ பீடன் அவரது ஆட்சி காலத்தில் துணை அதிபர் பதவி வகித்தவர். 59வது அதிபரை தேர்வு செய்யும் இந்த தேர்தல், இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் மக்கள் வாக்கு மூலம் அளவீடு கணக்கிடப்பட்டு புதிய அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். அதிபர் தேர்தலை ஜனநாயக கட்சியினர் ஒன்றிணைந்து எதிர்கொள்ள உள்ளதாக ஜோ பீடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close